Wednesday, 1 July 2015

உ.வே.சாமிநாதையரின் என் சரித்திரம்



Picture: Rare photo of U Ve Swaminatha Iyer whose birth day falls on 19th February.
உ.வே.சாமிநாதையரின் என் சரித்திரம்
தமிழனாகப் பிறக்கும் பேறு பெற்ற ஒவ்வொரு தமிழனும், தமிழ் தெரிந்த ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு உத்தமர் உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதையர் ஆவார். (1855-1942) அவரது ‘என் சரித்திரம்’ அற்புதமான தமிழ் உரைநடைக்கு ஒர் எடுத்துக் காட்டு. இந்த நூலைப் படிப்பதால் பல பயன்கள் உண்டு.
தமிழைக் காத்து அரிய ஓலைச்சுவடிகளைச் சேகரித்து அவற்றை முறையாக ஆராய்ந்து அதில் உள்ள உண்மைப் பொருளைக் கண்டறிந்து பல அற்புத நூல்களைப் பதிப்பித்த ஒரு தமிழறிஞரின் வாழ்வை அறிந்து கொள்ளும் பேறு இதைப் படிப்பதால்  முதல் பரிசாக நமக்குக் கிடைக்கிறது. அடுத்து தமிழின் ஆழத்தையும் அற்புதத்தையும் அறியும் பேறு கிடைக்கிறது. அடுத்து ஜிலு ஜிலுவென்ற தெளிந்த ஓட்டத்தை உடைய தூய பளிங்கு நீர் மானசசரோவரிலிருந்து கங்கை  பிரவாகமாக நாடு முழுவதும் பாய்வது போன்ற தமிழ் பிரவாகம் நம்மை பரவசப்படுத்துகிறது. 
கவிகளுள் மகாகவி கம்பன். பத்தாயிரம் பாடல்களைப் பாடியவன். அவன் போல் பத்து மடங்கு அதாவது நூறாயிரம் – ஒரு லட்சம் பாடல்களைப் பாடி ‘பத்துக் கம்பன்’ என்ற பெயரைப் பெற்ற  மகாவித்துவான திரிசிரபுரம்  மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களைப் பற்றிய செய்திகளை அறிய முடிகிறது. அவரின் மாணாக்கரே உ.வே.சா. 
தமிழுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த மாமேதையின் வீட்டில் ஒரு சிறிய சம்பவம்! அதை அவர் சொற்களாலேயே பார்ப்போம்:
“சென்னையிலிருந்து பைண்டர் நூறு சிந்தாமணி பிரதிகள் வரையில் பைண்டு செய்து ஒரு பெட்டியில் அனுப்பியிருந்தார். அதைப் பிரித்துப் புஸ்தகங்களை எடுத்துக் கோலம் போட்ட ஒரு பலகையின் மேல் வைத்து மாலை சுத்திக் கற்பூர நீராஞ்சனம் செய்து மஞ்சள் நீர் சுற்றி என் தாயார் என் கையில் எடுத்து அளித்து ஆசீர்வாதம் செய்தார். என் தந்தையார் கண்குளிரக் கண்டு மகிழ்ந்தார்” 
எப்படிப்பட்ட வைபவம்! எப்படிப்பட்ட தாயார்! எப்படிப்பட்ட தந்தையார்! என் சரித்திரம் என்ற நூலில் உ.வே.சா. இதைக் குறிப்பிட்டிருக்கிறார். 
தனக்குக் குடும்பக் கவலையே இல்லாமல்  குடும்பத்தினர் பார்த்துக் கொண்டதால் தமிழ்ப் பணியைத் தன்னால் தொடர்ந்து ஆற்ற முடிந்தது என்று அவர் குறிப்பிடுகிறார். சங்க நூல்களைச் சேகரித்து அவற்றைப் பதிப்பித்து தமிழர்களுக்கு ஒர் முகவரியைத் தந்தவர் உ.வே.சா. தனது வாழ்நாளில் 91 அரிய நூல்களைப் பதிப்பித்தவர் அவர். சுமார் 3067 ஏட்டுப் பிரதிகளை அவர் சேகரித்தார். அதற்காக அவர் பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல.
Picture of postage stamp to honour U.Ve.Sa.
என் சரித்திரத்தில் வரும் சில நிகழ்வுகளை இங்கே நினைவு கூர்வோம்! அந்நாளில் எல்லா நூல்களையும் பாடம் கேட்டுப் பயில்வதே பழக்கமாக இருந்தது. பெரியபுராணத்தை மகாவித்துவான் விளக்கமாகப் பாடம் சொன்ன போது நடந்த சம்பவம் இது. 
“கண்ணப்ப நாயனார் செயலைக் கண்டு சிவகோசரியார் வருத்தமுற்றதாகச் சொல்லும் சந்தர்ப்பம் வந்தது. நாங்கள் மேலே படித்தோம். உடனே பிள்ளையவர்கள், “இங்கே சில செய்யுட்கள் இருக்க வேண்டும். சிவபெருமான் கண்ணப்ப நாயனாரது அன்பின் பெருமையைச் சிவகோசரியாருக்கு வெளியிடுவதாக அமைந்துள்ள பகுதியில் சில அருமையான செய்யுட்களைப் பதிப்பிக்காமல் விட்டு விட்டார்கள்” என்று சொல்லித் தம் பெட்டியில் இருந்த பெரியபுராண ஏட்டுப் பிரதியை என்னை எடுத்து வரச்செய்து அதனைப் பிரித்துப் பார்த்தார். அவர் கூறியபடியே அங்கே ஐந்து செய்யுட்கள் காணப்பட்டன. அவற்றைப் படிக்கச் செய்து பொருள் கூறினார். நாங்கள் யாவரும் அந்த உயிருள்ள புஸ்தகசாலையின்  ஞாபகசக்தியை அறிந்து வியந்தோம்.” 
அனைத்துச் செய்யுள்களையும் மனப்பாடமாக அறிந்த பெரும் வித்தகர் பற்றிய அரிய செய்தியைக் கூறும் உ.வே.சா அடுத்துச் சொல்லும் நிகழ்ச்சி நம்மை வேதனை அடையச் செய்கிறது. தமிழன் இப்படி இருக்கலாமா என்று வெட்கமடையச் செய்கிறது.
பிற்பகலில் தொடங்கிய கண்ணப்ப நாயனார் புராணம் இரவு பன்னிரண்டு மணிக்கு நிறைவேறியது.
அப்பால் மடத்திலேயே ஆகாரம் செய்து கொள்ளும்படி என் ஆசிரியரைத் தம்பிரான் வற்புறுத்திக் கூறினர். அவர் அவ்வாறே இசைந்து  அங்கு உணவு உட்கொண்டார். நான் அதற்குள் என் சாப்பாட்டு விடுதிக்குச்சென்று போஜனம் செய்துவிட்டு வந்தேன்.


Picture of U.Ve.Sa.’s Statue at his birth place Uthamadhanapuram
ஆகாரம் ஆன பிறகு என் ஆசிரியர் தம்பிரான்களிடம் விடை
பெற்றுக்கொண்டு தம் வீடு சென்றார். நானும் அவருடன் சென்றேன். அப்போது அவர், “மடத்தில் ஆகாரம் செய்தமையால் இன்று நெய் கிடைத்தது” என்றார். அந்த வார்த்தை என் உள்ளத்தை வருத்தியது. அவர் சில நாட்களாக நெய் இல்லாமல் உண்டு\ வந்தார். நெய் வாங்குவதற்கு வேண்டிய பணம் கையில் இல்லை. குறிப்பறிந்து யாரேனும் உதவினாலன்றித் தாமாக ஒருவரிடம் இன்னது வேண்டுமென்று சொல்லிப் பெறும் வழக்கம் அவரிடம் பெரும்பாலும் இல்லை. இடைவிடாது பாடம் சொல்லி வந்த அவர் நெய் இல்லாமலே உண்டு வருவதை நான் அறிந்தவனாதலால் “இன்று நெய் கிடைத்தது” என்று அவர் கூறும்போது  அவர் உள்ளம் எவ்வளவு வெம்பியிருந்ததென்பதை உணர்ந்தேன்.
வறுமையின் கொடுமை எனக்குப் புதிதன்று. அதனால் விளையும்
துன்பத்தை அறிவு வந்தது முதலே நான் உணரத் தொடங்கி யிருக்கிறேன்.ஆயினும் பிள்ளையவர்களிடம் அதனை நான் எதிர்பார்க்கவில்லை.
“பெரிய கவிஞர், தக்க பிரபுக்களால் நன்கு மதிக்கப்படுபவர், தமிழுலகமுழுதும் கொண்டாடும் புகழ் வாய்ந்தவர், ஒரு பெரிய சைவ ஆதீனத்துச் சார்பிலே இருந்து வருபவர், சில நாள் நெய் இல்லாமல் உண்டார், ஒரு வேளை  கட்டளை மடத்தில் உண்ட உண்வு அவர் நெஞ்சப் புண்ணுக்கு மருந்தாயிற்று” என்ற விஷயங்களை அவரோடு நெருங்கிப் பழகினவரன்றி மற்றவர்களால் அறிய முடியாது. அவரும் அந்நிலையை வெளிப்படுத்திக் கொள்வதில்லை.
அவருடைய வாழ்க்கையே நிலையற்றதாகத்தான் இருந்தது. “இருந்தால் விருந்துணவு; இல்லாவிட்டால் பட்டினி” என்பதே அக்கவிஞர் பிரானுக்கு உலகம் அளித்திருந்த வாழ்க்கை நிலை. எனக்கு அதனை உணர உணர ஆச்சரியமும் வருத்தமும் உண்டாயின.”
உ.வே.சா அவர்கள் வருத்தத்துடன் பதிவு செய்யும் இந்த வார்த்தைகள் தமிழன் எப்படி வாழும் போதே பெரிய கவிஞர்களை இனம் கண்டு கொண்டதில்லை என்பதை நன்கு உணர வைக்கிறது.
பாரதியார் பட்ட சிரமம் போலவே மகா கவிஞரும் வேதனைப் பட்டு வாடியிருக்கிறார்.
++++++++++++++++++++++++++++++++++

தமிழர்களின் பெரும் புகழ் கூறும் சிலப்பதிகாரத்தைப் பதிப்பித்த பின்னர் புறநானூறு நூலைத் திருத்தமுறப் பதிப்பிக்கும் முயற்சியில் ஐயர் அவர்கள் ஈடுபட்டார். அதைத் திருத்தமுறை முடித்த அவர் இப்படிப் பெருமிதப்பட்டார்:- 
“புத்தகம் முடிந்து பார்க்கும்பொழுது, ‘நானா இவ்வளவும் செய்தேன்!’
என்று எனக்கே பிரமிப்பாக இருந்தது. இறைவன் திருவருளை வழுத்தினேன்.புத்தகத்தின் அமைப்பைப் பார்த்து நண்பர்களெல்லாம் பாராட்டி எழுதினர்.”
 
புற நானூறைப் பார்த்து மிகவும் மகிழ்ந்த பாண்டித்துரை தேவர் ஐயரை வெகுவாகப் பாராட்டி அடுத்த நூலுக்கென ஐநூறு ரூபாய் வழங்கினார்.
அடுத்து மணிமேகலை ஆராய்ச்சியில் அவர் தீவிரமாக இறங்கினார். புத்த சமயம் பற்றிய கருத்துக்களையும் புத்தரின் வாழ்க்கை வரலாற்றையும் நன்கு ஓர்ந்து பயின்றார். மணிமேகலையில் வரும் நல்ல கருத்துக்கள் அவரை வெகுவாகக் கவர்ந்தன. 
அவரே கூறி வியக்கும் சில பகுதிகளைக் காண்போம்:-
“பௌத்த சமயத்தினர் கூறும் நான்கு சத்தியங்களாகிய துக்கம்,
துக்கோற்பத்தி, துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் என்னும்
நான்கையும்,
பிறந்தோ ருறுவது பெருகிய துன்பம்;பிறவா ருறுவது பெரும்பே ரின்பம்;பற்றின் வருவது முன்னதுபின்ன
தற்றோ ருறுவ தறிக
என்று மணிமேகலை சுருக்கமாகக் கூறுகிறது. புத்த பிரானைப் புகழும்
பகுதிகள் பல. தயாமூல தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்த அவர் திறத்தை நன்கு வெளிப்படுத்தும் அடிகளை நான் படிக்கும்போதெல்லாம் என் உடல் சிலிர்க்கும்.
(புத்தரைத்) ‘தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன், மாரனை வெல்லும் வீரன்,  தீநெறிக் கடும்பகை கடிந்தோன், பிறர்க்கற முயலும் பெரியோன், துறக்கம் வேண்டாத் தொல்லோன்’ என்பன முதலிய தொடர்களால் பாராட்டி இருக்கிறார் மணிமேகலை ஆசிரியர்.
அன்ன தானத்தைச் சிறப்பிக்கும்,
மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோருயிர்  கொடுத்தோரே
என்ற அடிகள் என் உள்ளத்தைக் கவர்ந்தன.”
பல்வேறு அறிஞர்களை நாடி தகுந்த விளக்கங்களை எல்லாம் பெற்று மணிமேகலை நூல் வெளியிடப்பட்டவுடன் தமிழ் உலகம் வியந்தது,
1897-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் மகாமகம் நடந்தது. அப்போது
கும்பகோணத்திற் கூடிய கூட்டம் கணக்கில் அடங்காது. திருவாவடுதுறை  ஆதீனகர்த்தராக விளங்கிய அம்பலவாண தேசிகர் தம்முடைய பரிவாரங்களுடன் கும்பகோணம் பேட்டைத் தெருவிலுள்ள மடத்தில் விஜயம் செய்திருந்தார். பல தேசங்களிலிருந்தும் பிரபுக்களும் வித்துவான்களும் வந்து  கூடினர்.
அப்போது தினந்தோறும் அம்பலவாண தேசிகருடைய முன்னிலையில்வித்துவான்களுடைய உபந்நியாசங்களும் சல்லாபங்களும் நடைபெற்றன. ஒரு நாள் மிகச்சிறந்த வித்துவான்களைப் பூசித்து உத்தம சம்பாவனை செய்வதாக ஏற்பாடாகியிருந்தது. அம்பலவாண தேசிகர் ஆறு ஆசனங்களைப் போடச் சொல்லிப் பிரசித்தமான ஸம்ஸ்கிருத வித்துவான்கள் ஐவரை ஐந்து ஆசனங்களில் அமரச் செய்தார். அவர்கள் அமர்ந்த பிறகு என்னை நோக்கி “அந்த ஆசனத்தில் இருக்க வேண்டும்” என்று ஆறாவது ஆசனத்தைக் காட்டினார். எனக்குத் துணுக்கென்றது. வாழ்நாள் முழுவதும் சாஸ்திரப் பயிற்சியிலே ஈடுபட்டு எழுத்தெண்ணிப் படித்துத் தாம் கற்ற வித்தைக்கே ஒளியை உண்டாக்கிய அந்தப் பெரியவர்கள் எங்கே! நான் எங்கே? நான் யோசனைசெய்து நிற்பதை அறிந்த தேசிகர், “என்ன யோசிக்கிறீர்கள்? அப்படியே இருக்க வேண்டும்” என்றார். “இவர்களுக்குச் சமானமாக இருக்க எனக்குத் தகுதி இல்லையே” என்றேன். தேசிகர், “தகுதி உண்டென்பதை இந்த உலகம் அறியும். இவர்களைப் போன்ற மகா வித்துவான்கள் இந்த நாட்டில் தேடிப்பார்த்தால் ஒருவேளை கிடைத்தாலும் கிடைப்பார்கள். தங்களைப் போல ஒருவர் அகப்படுவது அரிது” என்று அன்பொழுகக் கூறி வற்புறுத்தவே அந்த மகா மேதாவிகளுடைய வரிசையிலே பணிவோடு அமர்ந்தேன். இரட்டைச் சால்வையும் சம்மானமும் பெற்றேன். மணிமேகலையில் மேற்கொண்ட உழைப்பே அந்தப் பெருமைக்குக் காரணமென்று நான் எண்ணி இறைவன் திருவருளை வாழ்த்தினேன்.”
 
இப்படி உத்தம சம்பாவனையை திருவாவடுதுறை ஆதீனகர்த்தரிடம் பெற்று மகிழ்ச்சி அடைந்தார் ஐயர் அவர்கள்.
வாழ் நாள் முழுவதும் தமிழ்ப் பணியே தன் பணி என்ற சீரிய கொள்கையை மேற்கொண்டு அதற்காகவே வாழ்ந்தார் அவர்.
அவரது வாழ்க்கையை ஊன்றிக் கவனித்தால் உழைப்புக்கும் தியாகத்திற்கும் தகுந்த மதிப்பை அவர் பெறவில்லை என்பதை நாம் நன்கு அறிய முடிகிறது.
மஹாகவி பாரதியாரே தம் கவிதையில் இதை எண்ணி வருந்தி அவருக்கு ஆறுதல் கூறி இருக்கிறார்,
மஹாமஹோபாத்தியாய என்ற விருதை பிரிட்டிஷ் அரசு வழங்கி கௌரவித்ததை ஒட்டி பிரஸிடென்ஸி காலேஜ் மாணவர்கள் ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்து அதற்கு மஹாகவி பாரதியாரையும் அழைத்தனர். விழாவிற்கு வந்த பாரதியார் ஐயர் அவர்க்ளைப் போற்றிப் பாடிய பாடலில், 
நிதியறியோம், இவ்வுலகத்தொரு கோடி
இன்பவகை நித்தம் துய்க்கும்
கதியறியோம் என்று மனம் வருந்தற்க
குடந்தை நகர்க் கலைஞர் கோவே!
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயிற்
துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்
இறப்பின்றித் துலங்குவாயே 
என்று அற்புதமாகக் குறிப்பிட்டு அவர் நிதியின்றியும் உலகத்தின் கோடி இன்பம் துய்த்தலின்றியும் வாழ்ந்ததை வருத்தத்துடன் நினைவு கூர்கிறார். அதனால் என்ன, பொதியமலை பிறந்த தமிழ் உள்ளளவும் அதைப் பாடும் புலவர் உள்ளளவும் அவர் நா உன் துதி செய்யும் என்று அற்புதமாக வாழ்த்துகிறார். 
அன்னியரே மஹாமஹோபாத்தியாய பட்டம் தருகின்றனர் எனில் முன்னால் இருந்த “அப்பாண்டியர் நாள் இருந்திருப்பின் இவன் பெருமை மொழியாலாமோ” என்று வியக்கிறார். 
தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையரின் சரித்திரம் மகத்தானது. தமிழர்களுக்கு உத்வேகம் ஊட்டுவது.அனைவரும் படிக்க வேண்டியது!
அன்னாரை நெஞ்சின் ஆழத்திலிருந்து துதி செய்து போற்றுவோம்; அவர் புகழ் பரப்புவோம்! 
அற்புதமான ‘என் சரித்திரம்’ நூலை முழுவதுமாக (122 அத்தியாயங்கள் சுமார் 772 பக்கங்கள் அடங்கியது)  ஒரு முறையேனும் தமிழர் என நாமம் கொண்டோர் படிக்க வேண்டும். இணையதளத்தில் அதைக் கட்டணமின்றிப் படிக்கலாம்; இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்; பிறருக்கும் அனுப்பலாம்.
அதற்கான இணையதளத் தொடர்பு இதோ:-
ANBUDAN
<>KSR<>

No comments:

Post a Comment