Saturday, 4 July 2015

இரு சொல் காவியங்கள்

கண்ணதாசனின், இரு சொல் விந்தைகள்!

kannadasan-mgr
எம்.ஜி.ஆருடன் கண்ணதாசன்

தமிழில் சுருங்கச் சொல்லி விளங் வைத்தல்!
தமிழின்  ஏராளமான சிறப்புக்களில் ஒன்று, எதையும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல். நுட்பமான கருத்துக்களை, ஆழ்ந்த தத்துவங்களை சிறு சொற்களால் கூறி விளங்க வைக்கும் மொழி உலக மொழிகளிலேயே இது ஒன்று தான். ஏன், வடமொழி, ஆங்கிலம் மற்றும் இதர மொழிகள் இதனுடன் இப்படிப் போட்டி போட முடியாதா என்ற கேள்வி எழுவது இயல்பே! இந்த மொழிகளிலும் இப்படிச் சுருங்கச் சொல்லும் வார்த்தைகள் உண்டு; சூத்திரங்கள் உண்டு. ஆனால் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைய வைக்கும் வேர்ச் சொற்களும் ஒரு சொல்லுக்கு ஏராளமான பொருள்களும் தமிழில் மட்டுமே உண்டு.
இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்!
ஒவ்வொரு சொல்லும் இனிமையானது; ஒவ்வொரு சொல்லும் அழகானது! இதுவே தமிழுக்கு உள்ள தனிச் சிறப்பு.
இதில் இரு சொற்களில் ஏராளமான கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் அடக்கிக் காட்டியவர் கண்ணதாசன்! இது அவர் அப்பன், பாட்டன், முப்பாட்டனிடமிருந்து அவர் பெற்ற சொத்து! தமிழ்ச் சொத்து!
வள்ளுவனின் இரு சொல் விளையாட்டு
எடுத்துக் காட்டாக வள்ளுவரின் குறளை எடுத்துக் கொள்வோம். அவர் கடலை (கடல் போன்ற அளவு கருத்துக்களை) குறுக இரு சொற்களில் அடக்கிக் காட்டியவர்.
கற்கக் கசடற – குறள் 391
செய்க பொருளை – குறள் 759
என்னைமுன் நில்லன்மின் – குறள் 771
உண்ணற்க கள்ளை – குறள் 922
இருநோக்கு இவளுன்கண் – குறள் 1091
நினைத்தொன்று சொல்லாயோ – குறள் 1241
காண்கமன் கொண்கனை – குறள் 1265
வருகமன் கொண்கன் – குறள் 1266
பெரும் சிறப்புகளை அடக்கிய இந்த இரு சொல் காவியங்கள் தமிழில் மட்டுமே உள்ளன.
இளங்கோவடிகளின் இரு சொல் அறிவுரை
அடுத்து சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகள் காப்பிய முடிவில் மனித குலத்திற்கே மாபெரும் செய்தியைச் சுருக்கமாகச் சொல்கிறார் – இரு இரு சொற்களால்! இதை மிஞ்சிய அறவுரையை, அறிவுரையை யாரும் தர முடியாது.
வஞ்சிக் காண்டத்தில், வரந்தரு காதையில் 186 முதல் 202 முடிய உள்ள வரிகளைப் படித்தால் இளங்கோவடிகளின் அற்புத தவமும் தமிழின் சிறப்பும் புரியும், இதில் சில இரு சொற் ஓவியங்கள் இதோ:-
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்
பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்ம்மின்: தவம்பல தாங்குமின்;
செய்ந்நன்றி கொல்லன்மின்; தீநட்பு இகழ்மின்;
பொய்க்கரி போகல்மின்; பொருள்மொழி நீங்கல்மின்;
அருமையான தமிழ் மொழியின் விந்தைகளை இரு சொற்களில் எப்படி பார்க்க முடிகிறது, பார்த்தீர்களா!
இப்படி தேவார திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தம்,சங்க இலக்கியம், சமீப கால நூல்கள் போன்ற அனைத்திலுமே இந்த இரு சொல் விந்தை ஏராளம் உண்டு.
பாரதியாரின் இரு சொல் மந்திரம்
கடைசியாக மஹாகவி பாரதியார் இதில் ஆற்றிய விந்தைகள் ஏராளம் உண்டு; இடம் கருதி சிலவற்றை மட்டும் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
வாழிய செந்தமிழ்!
சுடரே போற்றி!
விதியே வாழி!
செய்க தவம்!
சாகாவரம் அருள்வாய்!
வந்தேமாதரம் என்போம்!
நெஞ்சு பொறுக்குதிலையே!
ஆயிரக் கணக்கில் இப்படி இரு சொல் ஓவியங்களைத் தமிழில் எடுக்க முடியும்; வேறு மொழிகளில் இனிமையும் நீர்மையும் கொண்டுள்ள உவமைகளைக் காண்பது அரிது!
கண்ணதாசனின் இரு சொல் திரை ஓவியங்கள்
இந்த பாரம்பரியத்தில் வந்த கண்ணதாசனுக்குக் காலம் கை கொடுத்தது; திரைப்படத் துறை மின்னி மின்னி முன்னேறும் பருவத்தில் அவர் பாடலாசிரியராக பல்வேறு வாழ்க்கை நிலைக் களன்களுக்காக பாடல் எழுத வேண்டிய சூழ்நிலையை இறைவன் உருவாக்கி இருந்தான்.
கலங்காதிரு மனமே என்ற இரு சொல் முத்திரையுடன் தன் காலடித் தடத்தை திரைப்படப் பாடல் துறையில் அவர் பதித்தார். இது தான் அவர் இயற்றிய முதல் திரைப்படப் பாடல்.கன்னியின் காதலி என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது இந்தப் பாடல்!
கலங்காதிரு மனமே! – நீ
கலங்காதிரு மனமே!  – உன்
கனவெல்லாம் நனவாகும்
ஒரு தினமே!
இனி பல சொல்லோவியங்களை இரு சொற்களில் படைத்து திரையுலகப் பாடல்களில் ஒரு தனி ஏற்றத்தைத் தந்த கண்ணதாசனின் பாடல்களைத் தொகுத்து அவற்றின் சிறப்பை எழுத ஒரு தனி நூல் தேவையாயிருக்கும் என்பதால் சில பாடல்களை மட்டும் இங்கே சுட்டிக் காட்டி முடிக்கலாம்! வாசகர்கள் அசை போட்டு அதன் சிறப்புகளை மனதில் ஏற்றி மகிழ முடியும்!
பாடலும் படமும்!
கங்கைக்கரைத் தோட்டம்
கன்னிப் பெண்கள் கூட்டம் –ஓ
கண்ணன் நடுவினிலே
காலை இளங்காற்று
பாடிவரும் பாட்டு
எதிலும் அவன் குரலே   – படம் : வானம்பாடி
அழகு ரசிப்பதற்கே
அறிவு கொடுப்பதற்கே
மனது நினைப்பதற்கே – ஆஹா!
வாழ்க்கை வாழ்வதற்கே   – படம்  வாழ்க்கை வாழ்வதற்கே
வரவு எட்டணா
செலவு பத்தணா
அதிகம் இரண்டனா –
கடைசியில் துண்டனா     படம் பாமா விஜயம்
பாட்டுப் பாடவா
பார்த்துப் பேசவா
பாடம் சொல்லவா
பறந்து செல்லவா       படம்  தேன்நிலவு
பேசுவது கிளியா – இல்லை
பெண்ணரசி மொழியா
கோவில்கொண்ட சிலையா
கொத்து மலர்க்கொடியா
பாடுவது கவியா – இல்லை
பாரிவள்ளல் மகனா
சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா     படம் : பணத்தோட்டம்
கண்ணெதிரே தோன்றினாள்
கனிமுகத்தைக் காட்டினாள்
நேர்வழியில் மாற்றினாள்
நேற்றுவரை ஏமாற்றினாள்           படம்  இருவர் உள்ளம்
நீ என்பதென்ன
நான் என்பதென்ன                 படம் வெண்ணிற ஆடை
தோட்டத்து மாப்பிள்ளை
வீட்டைத் தேடிவந்தால்
சும்மா வரலாமா                   படம்   இதயத்தில் நீ
களங்கமில்லா காதலிலே
காண்போம் இயற்கையெலாம்          படம்   இல்லறஜோதி
பொன்னென்பேன் சிறு
பூவென்பேன் – காணும்
கண்ணெண்பேன் வேறு
என்னென்பேன்?!                  படம் போலீஸ்காரன் மகள்
kanna2
நூற்றுக்கணக்காக உள்ள இரு சொற்பாடல்களில் மேலே பத்தைப் பார்த்தோம்.
இவற்றில் நவரஸங்களும் ததும்பும்; உணர்ச்சிகள் பொங்கும்; தமிழ் சுருக்கமாக விளையாடும்; விரிவாக அர்த்தத்தைத் தரும்.
இவற்றைத் தொகுத்துப் பாடினாலே
வரும் சுகம்
இது நிஜம்!
மூன்று சொல் கவிதைகளுக்குள் மூழ்க வேண்டுமெனில் அது ஒரு கடல் அல்லவா! அங்கு முத்தும் பவழமும் சங்கும் – இன்னும் விலை மதிப்பில்லா மணிகள் அனைத்தும் அல்லவா கிடைக்கும்.
கவியரசின் அனுபவி ராஜா அனுபவி படத்தின் முத்தான வார்த்தைகள் நினைவுக்கு வருகிறதா –   முத்துக் குளிக்க வாரீகளா!!
Thanks Sri KSR

No comments:

Post a Comment